என் பெயர் கந்தசாமி. என் சொந்த ஊர் புலியூரான். தமிழகத்தில் ஒவ்வொரு கோவிலுக்கும் தனிச்சிறப்பு
உண்டு.
என்னுடைய ஆய்வான "புலியூரான் சித்தர் கோயில் வரலாறும், வழிபாடும்", அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இப்பக்கத்தை உருவாக்கியுள்ளேன்.
கோயில்
தோன்றிய வரலாறு
ஆதி முத்திருளன் என்ற தவசி புலியூரானில்
பிறந்து வளர்ந்தவர். இவர் 21 தெய்வங்களை
வணங்கி வந்துள்ளார். அத் தெய்வங்களுக்கு மறைமுகமாக உணவு வழங்கி வந்துள்ளார்.
ஊருக்குள் இரட்டை காவடி எடுத்து சோறு வாங்கி அவற்றை ஒவ்வொரு தெய்வங்களின் பெயரைக்
கூறி சோறுக் கொடுத்து வந்துள்ளார். அச்சமயம் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான
பாம்பாட்டிச் சித்தர் புலியூரானை நோக்கி வந்து கொண்டிருக்கும் போது, தெய்வங்களின் பெயரைக் கூறி அழைத்து உணவு
கொடுப்பது அதிசயமான ஒரு செயலாக தெரிந்து, அது யார்?
என்ன என்பது பற்றி
தெரிந்து கொள்ள கட்ட புளிய மரத்தின் அடியில் வந்தார். அங்கு தான் 21 தெய்வங்களுக்கும் ஆதி முத்திருளன் என்பவர்
உணவு அளித்து வந்துள்ளார். அந்த இடமானது செடிகள் நிறைந்த மிகப் பெரிய புதர். அந்தப் புதருக்குள் ஒரு புளியமரம் மட்டும் இருந்திருக்கிறது. உடனே
பாம்பாட்டிச் சித்தர் உள்ளே சென்று நீங்கள் யார்? ஏன்? இவ்வாறு செய்கின்றீர்கள் எனக் கேட்கும் போது, வந்திருப்பது
பாம்பாட்டிச் சித்தர் என்பதை ஆதி முத்திருளன் அறிந்து கொண்டார். நான் சில காலம்
இந்த ஊரில் தங்க இருக்கிறேன் என்று பாம்பாட்டிச் சித்தர் கூறியதும், தாராளமாக தங்கி இருக்கலாம் எனக் கூறி
அவருக்குத் தேவையான பணிவிடைகளையும் செய்து வந்தார்.
அப்படியே ஊருக்குள் வந்து மக்களுக்கு
வைத்தியம் செய்வது, சில அற்புதம்
நிகழ்த்திக் கொண்டும், சோறு வாங்குவதும் என
வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. அந்த சமயம் ஊரில் வாழ்பவர்களுக்கு ஐயம் எழுந்தது;
ஒரு வயதான கிழவர் இரட்டை
காவடி எடுத்து உணவு வாங்கி என்ன செய்கிறார். இவருக்கு எத்துணை குழந்தைகள்
இருக்கின்றனவென்று ஒன்றும் தெரியாமல் புலம்பிக் கொண்டிருந்தனர்.
ஒரு நாள் ஆதிமுத்திருளனைப் பின் தொடர்ந்து
மறைமுகமாக இரண்டு நபர்கள் சென்று தெய்வங்களுக்கு உணவு வழங்குவதைப் பார்த்து
விட்டார்கள். இதைக் கண்டதும் ஆதிமுத்திருளன் சீற்றம் அடைந்து அத்து மீறி உள்ளே
வந்ததற்காக சபித்து விடுகிறார். அச்சமயம் பாம்பாட்டிச் சித்தர், ஆதி முத்திருளனிடம் நமக்கு தெய்வத்தின்
ஆசிர்வாதம் நிறைவாக இருக்கிறது. அதை தவறான வழியில் பயன்படுத்தக் கூடாது.
வந்தவர்கள் யார்? என்பதை அறிந்து
அவர்களுக்கு புத்திமதி கூறி அனுப்பி வைப்பதற்கு தான் அதிகாரமே தவிர அவர்களைத்
தண்டிப்பதற்கு நமக்கு எந்த விதத்திலும் அதிகாரம் இல்லை அதனால் அவர்களுக்கு
புத்திமதி கூறி சாபத்தில் இருந்து விடுவித்து விடுமாறு கூறினார். வந்த இருவரையும்
அழைத்து, அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும்
சித்தருக்கும், வயதான அந்தக்
கிழவருக்கும் பணியாளராகப் பணி புரிய கட்டளை இடுகின்றனர். அவர்களும் அதை ஏற்று
இன்று வரை செய்து வருகிறார்கள்.
ஆதிமுத்திருளன் பாம்பாட்டிச் சித்தரிடம்
தனக்கு நல்லதொரு அருள்வாக்கு கூற வேண்டும் எனக் கேட்க அதற்கு பாம்பாட்டிச் சித்தர்
அவருடைய செயல்பாடுகளெல்லாம் திருப்திகரமாக இருந்ததனால் சீடராக ஏற்றுக் கொண்டு
தீட்சை கொடுக்க முன் வந்தார். ஜீவசமாதி ஆகும் தகுதி உமக்கு இருக்கிறதென்று கூறி
ஆடி மாதம் 18ஆம் நாள் புனர்
பூசம் நட்சத்திரத்தில் ஜீவசமாதி நிலையை அடைந்தார். ஆனால் எந்த ஆண்டு என்பது பற்றி
தெரியவில்லை என்கிறார் தகவலாளி6
ஆதிமுத்திருளன் எல்லா மக்களின் ஆதரவுடன்
ஊருக்குள் ஒரு பொதுவான இடத்தில் ஜீவசமாதி நிலையை அடைந்தார். ஜீவசமாதி ஆகும் முன்பு
அந்த இரண்டு நபர்களைக் கூப்பிட்டு இவருடைய செயல்பாடுகளை பாதுகாக்கும் பொறுப்பினை
உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்று கூறி, அந்த 21 தெய்வங்களையும் ஜீவசமாதி அடைந்த இடத்தைச்
சுற்றிலும் பிரதிஷ்டை செய்து ஒரு குடும்பத்தினரை பூசாரியாகவும்இ
மற்றொரு குடும்பத்தினரை பாதுகாவலராகவும் நியமனம் செய்தாராம்.
இப்படி இருக்கும் காலத்தில் 21 தெய்வங்களுள் ஒன்றான இருளப்பசாமியின் தங்கை
பொன்னிருளாயி கோயிலுக்குள் இருக்கும் போது மற்ற தெய்வங்களைக் காட்டிலும் இதன்
தன்மை வேறுபட்டிருந்தது. ருத்ர முகமாகவும், சாந்தம்
இல்லாமலும் முகம் காணப்பட்டது. இரவு வேளையில் மக்களை பயமுறுத்துவது கொஞ்சம் தவறாக
நடந்தாலும் அவர்களைத் தண்டிப்பது, கர்ப்பமாக
இருக்கும் பெண்களைச் சிரமப் படுத்துவது போன்ற கஷ்டங்களை ஏற்படுத்தும். ஊர்
மக்கள் அனைவரும் ஆதிமுத்திருளனிடம் முறையிட அவர் இருளப்பசாமியை அழைத்து உன்
தங்கைக்குச் செய்ய வேண்டிய முறையை முறையாய் செய்வோம். பொன்னிருளாயியைக்
கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வா எனக் கூற, இருளப்பசாமி தன்
தங்கையைக் கூப்பிட்டு உன்னுடைய கோபத்தையும், ஆக்ரோஷத்தையும் ஊர்
தாங்காது உனக்கென்று ஓரிடம் தருகிறேன் அங்கு நீ ஜீவனம் பன்னு உனக்குரிய மரியாதையை
நான் வருஷத்துல ஒருநாள் வந்து சிறப்பாகச் செய்கிறேன். நீ
ஊர் மக்களைக் காத்து இரு; தவறு செய்தால்
அவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் உணர்த்தும் மாதிரி தண்டனையைக் கொடு
என வாக்குறுதி வாங்கிக் கொண்டு ஊரின் கிழக்கு எல்லையில் மயானக் கரையின் அருகினில்
மயானக் காளியாக காட்சி தருகின்றாள்.
கோயில்
குல தெய்வ வழிபாடு
புலியூரான் சித்தர் கோயிலைச் சுற்றி
இருக்கின்ற தெய்வங்களான, கருப்பணசாமி, இருளப்பர், வீரபத்திரர், நல்லதம்பி, சோனையப்பர் ஆகிய
தெய்வங்களை மறவர் சமூகமும், வெள்ளாளர் சமூகமும், நாடார் சமூகமும், ஆசாரி சமூகத்தாரும் குல தெய்வமாகக் கொண்டு வழிபட்டு
வருகின்றனர்.
கோயிலின்
தனிச்சிறப்பு
விஷக்கடி சம்பந்தப்பட்ட
நோய்களுக்கும் அரும்பறை, பால்பரு, சொறி, செரங்கு
முதலியவற்றிற்கு மந்திருச்சு தீர்த்தம், வீபூதி வழங்கப்
பெறுவது இக்கோயிலின் தனிச்சிறப்பாக அமைகின்றது.
“குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களுக்கு, வெறும் வயிற்றில் பெயர் வைக்கும் வழக்கம்
இன்றளவும் காணப்படுகிறது”
அமைவிடம்
புலியூரான் கோயில் விருதுநகர் மாவட்டம்
அருப்புக்கோட்டையிலிருந்து 12 கி.மீ தொலைவில் “சித்தர் கோயில்” ஏக்கர்
நிலப்பரப்பில் இச்சித்தர் கோயில் அமைந்துள்ளது. இது பெருந்தெய்வ கோயிலாகவும், சிறு தெய்வ கோயிலாகவும் அமைந்திருக்கும்
பாங்கினை உடையது.
திசை
அமைப்பு
கட்டுமானக் கோயில்களில் தொடக்கக் காலத்தில் ஆகம விதிப்படி, கிழக்கு முகமாக அமைக்கப்படாது. பல்வேறு திசைகளை
நோக்கி அமைத்தனர் என்றாலும், பெரும்பான்மையான
கோயில்கள் கிழக்கு நோக்கியே அமைந்திருந்தன. புலியூரான் சித்தர் கோயிலும் கிழக்கு
நோக்கியே அமைந்திருக்கின்றது.
கருவறை
புலியூரான் சித்தர் கோயில் கருவறையினில்
குருநாதரும், அங்காள பரமேஸ்வரி
அம்மனும், மகமாயி அம்மனும் மூலவர்களாக கிழக்கு முகமாக
காட்சி தருகின்றனர்.

அர்த்த
மண்டபம்
கருவறைக்கு முன்பு உள்ள வெளி மண்டபம்
அர்த்த மண்டபம் ஆகும். இதில் ஆதிமுத்திருளன் (எ) சித்தநாதர் வடகிழக்குத்
திசையில் அமைந்துள்ளார். உற்சவரான
சிதம்பரத் தாண்டவர் கிழக்கு நோக்கி அமர்ந்து காட்சி தருகின்றார்.
மகா
மண்டபம்
இச்சித்தர் கோயிலின் அர்த்த மண்டபத்தை
அடுத்ததாக மகா மண்டபம் உள்ளது.
சுற்றுப்
பிரகாரங்கள்
கருப்பண
சுவாமி ஸ்ரீ ராக்காயி:
கருப்பண சுவாமியும் ராக்காயி அம்மனும்
சேர்ந்து இருக்கும் நிலையினில் காட்சி தருகின்றனர். இருவரும் கிழக்கு நோக்கி
அமர்ந்திருந்து அருள்புரிகின்றார்கள். பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக் கடனாகச்
செலுத்தும் உயிர்பலியை இக்கோயிலுக்கு வெளியே இச்சன்னிதியின் முன்னால்
செலுத்துகின்றனர்.

ஸ்ரீ
ஆலடி சுவாமி
ஸ்ரீ ஆலடி சுவாமி வடக்கு திசை நோக்கி
அமர்ந்துள்ளார்.
ஸ்ரீ
வீரபத்திரர்
ஸ்ரீ வீரபத்திரர் வடக்கு திசை நோக்கி
அமர்ந்துள்ளார். சிலர் இவரை குல தெய்வமாக வழிபடுகின்றனர்.
ஸ்ரீ
இருளப்பர்
ஸ்ரீ இருளப்பர் வடக்கு திசை நோக்கி
அமர்ந்துள்ளார். மயானக் காளியான பொன்னிருளாயியின் அண்ணன் ஆவார். இவரையும் குல
தெய்வமாக சில மக்கள் வழிபடுகின்றனர்;.

ஸ்ரீ முத்துக் கருப்பசாமி
ஸ்ரீ
பேச்சி அம்மன்
ஸ்ரீ பேச்சி அம்மன் தெற்கு திசை நோக்கி
அமர்ந்துள்ளார்.
ஸ்ரீ
நல்லதம்பி சுவாமி
ஸ்ரீ நல்லதம்பி சுவாமி தெற்கு திசை நோக்கி
அமர்ந்துள்ளார். இவரை குல தெய்வமாகக் கொண்டு சிலர் வழிபடுகின்றனர்.
ஸ்ரீ
ஒண்டி வீரப்பர்
ஸ்ரீ ஒண்டி வீரப்பர் தெற்கு திசை நோக்கி
அமர்ந்துள்ளார்.
ஸ்ரீ
பைரவர்
ஸ்ரீ பைரவர் மேற்கு திசை நோக்கி
அமர்ந்துள்ளார்.
விநாயகர்
விநாயகர் கிழக்கு திசை நோக்கி
அமர்ந்துள்ளார்.
ஸ்ரீ
கம்பத்தடியார்
ஸ்ரீ கம்பத்தடியாhர் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்துள்ளார்.
ஸ்ரீ
பாதாள அம்மன்
ஸ்ரீ பாதாள அம்மன் தெற்கு திசை நோக்கி
அமர்ந்துள்ளார்.
உரல்
கடையப்பர்
உரல் கடையப்பர் மேற்கு திசை நோக்கி
அமர்ந்துள்ளார்.
நந்தீஸ்வரர்
நந்தீஸ்வரர் மேற்கு திசை நோக்கி
அமர்ந்துள்ளார்.
சோனையப்பன்
சோனையப்பன் வடக்கு திசை நோக்கி
அமர்ந்துள்ளார். இவர் கோயிலின் வெளிப்புறத்தில் காவல் தெய்வமாக காட்சி
தருகின்றார்.
“பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக் கடன்களான
உயிர்பலியிடுதலை இவரே ஏற்றுக் கொள்கிறார்”
வழிபாட்டு
முறைகளும் திருவிழாக்களும்
நாள்
வழிபாடு
குருநாதருக்கு தினமும் ஒரு வேளை (கால)
பூசை, வாய்க்கட்டி பூசாரியால் சுத்த சோறு படைத்து
நடத்தப்பட்டு வருகிறது.
வார
வழிபாடு
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மற்றும்
வெள்ளிக் கிழமைகளில் காலையிலும், மாலையிலும்
குருநாதருக்கு பூசை நடத்தி வருகிறார்கள்.
மாத
வழிபாடு
புலியூரான் சித்தர் கோயிலில்,
“மாதந்தோறும் பௌர்ணமியன்று சிறப்பு பூசை செய்த
பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது”
பிரசாதம்
“பக்தர்களுக்கு விபூதி, படையிலிட்ட உணவு, (வெள்ளைப் பொங்கல்) தீர்த்தம், பூ மற்றும் பூ மாலைகள் ஆகியவை பிரசாதமாக
வழங்கப் பெறுகின்றன”
சித்திரைத்
திருவிழா
சித்திரை ஒன்றாம் நாள் ஆண்டுப் பிறப்பு
அன்று சாமி நகர்வலம் வந்து வெள்ளாளர் சமுதாய மண்டகப்படியில் இரவு தங்கி இருக்க, மக்கள் மாவிளக்கு எடுத்தல் மற்றும் செய்ய
வேண்டிய சடங்குகளை செய்து முடிப்பார்கள். மறுநாள் மாலைப் பொழுதில் “பெரிய ஊத்து” என்னும் இடத்திற்கு சென்று சாமி தீர்த்தம் ஆடி
பின்னர் கோயிலுக்குள் செல்லும்
“எந்த ஒரு சமுதாயத்தினருக்கும் மண்டகப்படி
கிடையாது ஆனால் வெள்ளாளர் சமுதாயத்தினருக்கு மட்டுமே மண்டகப்படி உள்ளது”
கார்த்திகைத்
திருவிழா
கார்த்திகை மாதம், பெரிய கார்த்திகை அன்று இரவு சாமிபுறப்பட்டு
நகர்வலம் வந்து பின்னர் கோயிலுக்குள் சென்று விடும். “கோயில் முன்னால் சொக்கப்பன் கொளுத்தப்படும்”
மாசிப் பெருவிழா
மாசி மாதம் நடைபெறும் திருவிழா தான் மிகப்
பெரிய திருவிழாவாக கொண்டாடப் பெறுகின்றது. இது தொடர்ந்து ஏழு நாள்கள் இரவில்
நடைபெறுகின்றது.
முதல்
நாள் திருவிழா
முதல் நாள் காப்பு கட்டி கொடியேற்றத்துடன்
திருவிழா தொடங்குகிறது.
இரண்டாம்
நாள் திருவிழா
மயானக் காளியான பொன்னிருளாயிக்கு உணவு
படையல் எடுத்துஇ பச்சரிசி மாவினை இடித்து அதில் காளி உருவம் செய்து, அதனை கப்பரையாக
எடுத்துக் கொண்டு போய் நடு இரவில் செலுத்துவது வழக்கம். அந்த படையல் உணவில் உதிரங்கள் (இரத்தம்) சேர்த்து எறிசோறு இடுவர்.
“எறிசோறு என்பது புதிய சொளகில் ஒரு சிறு பிள்ளை
உருவம் செய்துஇ அவற்றில் கருங்குட்டி (பன்றி), செங்குட்டி
(கிடா), செஞ்சேவல் ஆகியவற்றின் இரத்தத்தை கலந்து
எடுத்துச் செல்வார். உதிரம் கலந்த சோற்றை எந்த இடத்தில் வாங்குகிறதென்பது உடன்
செல்லும் நான்கு நபர்களுக்கு மட்டும் தான் தெரியும். அதுவும் கொடுக்கும் சமயம்
அவர்களின் கண்கள் கட்டப்பட்டு விடும். பின்னர் எறிசோற்றை காளி வாங்கிச் செல்வாள்”
பொன்னிருளாயிக்கு படைக்க வேண்டிய
படையல்கள் அனைத்தையும் படைத்து விட்டு பின்னர் கோயிலுக்குத் திரும்பிச் செல்லும்
போதுஇ மாவினால் செய்த காளி உருவத்தின் மூக்கினை பட்டாக் கத்தியால் வெட்டி விட்டுச்
செல்கிறார். இம்மூக்கறுப்பு நிகழ்வு இக்கோயிலில் இன்றும் நடைபெற்று வருகிறது.
மூன்றாம்
நாள் திருவிழா
மூன்றாம் நாள் திருவிழாவின் போது மஹா சிவன்
ராத்திரி, அன்று இரவில் கரகம் எடுத்து வந்து அலகு
நிறுத்துதல் நிகழ்ச்சி நடைபெறும். அதாவது மண்களயத்தில் சிறு விளிம்பு இருக்கும்.
ஆதில் குருநாதன் கரகம், அங்காள பரமெஸ்வரி
கரகம், மகமாயி கரகம் என மூன்று
கரகம் எடுத்து அதற்குரிய மூன்று பூசாரிகள் சூலாயுதத்தை எடுத்துச் சென்று சாமி ஆடி
அருள் இறங்கி அந்த சிறுவிளிம்பில் சூலாயுதத்தைச் செங்குத்தாக நிறுத்துவர். இது
எல்லா மக்களின் முன்னிலையிலும் ஆண்டு தோறும் நடைபெற்று வருவதை ஆய்வில் காண
முடிகிறது.

நான்காம்
நாள் திருவிழா
கரகத்தை நல்ல முறையில் ஏற்றுக் கொண்டதற்காக
நடைபெறுவது நான்காம் நாள் திருவிழர் இதனை அமாவாசை பூசை எனக் கூறுகின்றனர். ஒரு
பல்லயம் போட்டு, பச்சரிசியில்
சாதம் செய்து சர்க்கரைப் பூசணியை நெய்வேத்தியமாக வைத்து தெய்வங்களுக்கு நன்றிக்
கடன் செலுத்துவதாக அமைகின்றது.
ஐந்தாம்
நாள் திருவிழா
ஐந்தாம் நாள் பாரிவேட்டைத் திருவிழா
நடைபெறுகிறது. சாமி பல்லக்கில் புறப்பாடு ஆகி, மயானக் காளியான பொன்னிருளாயிடம் சென்று அங்கு
பூசாரிகள் காவல்காரர்கள் வேட்டையாடி முடித்த பின்னர் மறுபடியம் சாமி திரும்ப
கோயிலுக்கு வரும். அன்று இரவில் கொடியை இறக்கி விடுவார்கள்.


ஆறாம்
நாள் திருவிழா
ஆறாம் நாள் திருவிழா பக்தர்கள்
நேர்த்திக்கடன் செலுத்துதல், முடிக்கணிக்கைச்
செய்தல், உயிர்ப்பலி
இடுதல் போன்ற சடங்கு முறைகள் நடைபெறுகின்றன.
ஏழாம்
நாள் திருவிழா
ஏழாம் நாள் திருவிழாவானது கருப்பண பூசை
என்றும், ஊர் பூசை என்றும்,
அழைக்கப்பெறுகிறது.
“ஊர் மக்களிடம் மடிப்பிச்சை எடுத்த அதில்
கிடைக்கும் அரிசி, நவ தானியங்களைச்
சேர்த்து சமையல் செய்து, கருப்பண
சாமிக்கும், பேச்சியம்மனுக்கும்
படையல் படைத்து பின்னர் அந்தப் படையல் உணவை ஊரில் உள்ள அனைவருக்கும் வழங்குவர்”
புலியூரான் சித்தர் கோயிலில் ஏழு நாள் திருவிழாக்கள் பிற கோயில்களில் நடைபெறுவதைப் போல் காணப்படினும் பொன்னிருளாயிக்கு படைக்கும் காளி உருவத்தில் - பெண்ணுருவத்தின் மூக்கினை பட்டாக் கத்தியால் வெட்டும் நிகழ்வானது காளியின் கோபத்தை சாந்தம் அடையச் செய்வதற்கென கள ஆய்வின் மூலம் அறிய முடிகிறது.

Is Jeevasamathi Thamburan or Aadhi Muththirulan ? Can somebody brief about Thamburan ?
ReplyDelete